ஓய்வு என்பது சும்மா இருப்பதில்லை

ஓய்வு என்றால் என்ன? எந்த வேலையும் செய்யாமல் “சும்மா’ உட்கார்ந்திருப்பதுதான் ஓய்வு என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஓய்வு என்பது நாம் செய்து கொண்டிருக்கும் வேலையில் தவறு மற்றும் சலிப்பு ஏற்படாமல் இருக்க, தாற்காலிகமாக வேறு பணியைச் செய்து நம் உடலையும், மனதையும் உற்சாகப்படுத்திக் கொள்வதாகும்.
-
காலம் பொன் போன்றது; மனிதன் தன் வாழ்க்கையில் பணம், பதவி, பொன், பொருள் என எதை இழந்தாலும் மீண்டும் பெற்று விடலாம். ஆனால், காலம் என்ற ஒன்றை மட்டும் மீண்டும் பெறவே முடியாது
.-
ஓய்வு என்ற பெயரால் காலத்தை வீணடிக்கும் சோம்பேறித்தனமே நம் முன்னேற்றங்களுக்கு எல்லாம் முட்டுக்கட்டையாக இருக்கிறது.
-
ஓய்வு பற்றிய இந்த சோம்பேறிக் கோட்பாடு, நமது குழந்தைகள் இதயத்திலும் வேரூன்றத் தொடங்கியுள்ளன. ஆண்டு முழுவதும் படித்துக் களைத்து, தேர்வுகளும் முடிந்துவிட்டதால், வரும் மே மாதம் முழுவதும் ஓய்வு எடுக்கப் போவதாகக் கூறி, காலை பொழுது விடிந்தது முதல், இரவு உறங்கச் செல்லும்வரை தொலைக்காட்சி பெட்டியே கதியெனக் கிடந்து தங்கள் உடலையும், மனதையும் கெடுத்துக் கொள்கின்றனர். அல்லது கொளுத்தும் கோடை வெயில் முழுவதும் என் தலையில்தான் என கையில் கிரிக்கெட் மட்டையைத் தூக்கிக் கொண்டு மைதானத்துக்கு ஓடிவிடுகின்றனர்.
-
மாணவர்களின் இதுபோன்ற விடுமுறைக் காலங்களைப் பயனுள்ளதாக மாற்றுவது பெற்றோரின் கைகளில்தான் உள்ளது. ஒவ்வொரு விடுமுறையிலும் மாணவன் கற்றுக் கொள்ளும் ஏதேனும் ஒரு விஷயம், அவன் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து பயனளிக்குமாறு அவர்களின் விடுமுறைக் காலத்தைப் பயனுள்ள வழியில் கழிக்க நாம் கற்றுக் கொடுக்க வேண்டும்.
-
உதாரணமாக, இப்போதெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் அப்பாவுக்கு, அம்மாவுக்கு, அண்ணனுக்கு என நான்கைந்து செல்போன்கள் உள்ளன. அவற்றில் பழுது ஏற்பட்டால் சரி செய்ய உதவும் செல்போன் சர்வீஸிங் பயிற்சிக்கு ஆண் பிள்ளைகளை அனுப்பலாம். இதன் மூலம் தங்கள் வீட்டு செல்போன் மட்டுமின்றி, நண்பர்கள் மற்றும்
-
அக்கம்பக்கத்திலுள்ளவர்களின் செல்போன்களைப் பழுது நீக்கி, பகுதிநேர தொழிலாகக் கூட செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் இயற்கையாகவே அவருக்கு அத் துறையில் ஆர்வம் எற்பட்டு, எதிர்காலத்தில் மிகச் சிறந்த பொறியாளராகவோ அல்லது விஞ்ஞானியாகவோ கூட வர வாய்ப்புள்ளது.
-
பெண் குழந்தைகளைத் தையல் பயிற்சிக்கு அனுப்புவதன் மூலம்  தங்களுக்கும் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் தேவையான ஆடைகளை அவர்களே தைத்துக் கொள்வதோடு மட்டுமின்றி, அக்கம்பக்கத்தினருக்கும் தைத்துக் கொடுக்க வாய்ப்பளிக்கலாம்.
-
தன்னுயிரை மட்டுமின்றி, ஆபத்துக் காலங்களில் பிற உயிர்களையும் காக்க உதவும் நீச்சல் பயிற்சி, வீட்டு உபயோகப் பொருள் பழுதுநீக்கும் பயிற்சி, தற்காப்பு கலைப் பயிற்சி மற்றும் மகளிருக்கான சமையல், கணிப்பொறி, தட்டச்சுப் பயிற்சி என கோடை காலப் பயிற்சிகள் ஏராளமாக உள்ளன.  சிறு குழந்தைகளுக்கு ஓவியப் பயிற்சி, கணிதம், கையெழுத்துப் பயிற்சி என தினசரி 2 மணி நேரம் ஒதுக்கினாலே போதும், அவை அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நற்பயனை அளிக்கும்.
-
இவ்வாறு பல துறைகளில் குழந்தைகளை ஈடுபடுத்துவதன் மூலம் அவர்கள் எத் துறையில் ஆர்வத்துடன் செயல்படுகிறார்கள் எனக் கண்டறிந்து, அவர்களை அத் துறையிலேயே ஈடுபடுத்தி வாழ்வை வளமாக்க முடியும்.
-
ஆனால், நாமோ நம் நேரத்தையெல்லாம், டி.வி. மற்றும் கணிப்பொறி முன் பலி  கொடுத்துவிட்டு, ஓய்வு என்ற பெயரில் சோம்பேறியாக வாழவே நம் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்கிறோம்.

-
நமது தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள் கூறியபடி, ஒரு மாணவன் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் புத்தகப் படிப்பையும், 4 மணி நேரம் தொழில் படிப்பையும் பயில வேண்டும், அதுவே அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்.
-

இல்லையில்லை! நாங்கள் கோடை விடுமுறைக்கு சுற்றுலாதான் செல்வோம் என்றாலும் தவறில்லை. ஆனால், அந்தச் சுற்றுலாவும் குழந்தைகளுக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.
-
சுற்றுலா செல்லுமிடத்தில் உள்ள வரலாற்றுச் சின்னங்களைப் பற்றியோ, பழமையான கோவில்களைப் பற்றியோ குழந்தைகளுக்கு அக்கறையுடன் விவரியுங்கள். நமது நாட்டின் பாரம்பரியக் கலாசாரப் பெருமைகளை உணர்த்தும் இடங்களுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லுங்கள்.
-
மேற்கூறிய எதையும் செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை, முடிந்தால் உங்கள் உறவினர்களின் வீடுகளுக்காவது விடுமுறைக்குச் சென்று வாருங்கள்.
-
அப்போது தான் மாமா, அத்தை, சித்தி, சித்தப்பா, தாத்தா, பாட்டி என உறவுகளின் மகத்துவத்தைக் குழந்தைகள் உணர்வார்கள். வீணாக தொலைக்காட்சி, கணினி முன் அமர்ந்து மனதையும், வெயிலில் அலைந்து உடலையும் கெடுத்துக் கொள்ளாமல் விடுமுறைக் காலத்தை பயனுள்ளதாகப் பயன்படுத்திய திருப்தி நமக்குக் கிடைக்கும்.
-
————————————————–
>வாணிஸ்ரீ சிவகுமார் – தினமணி…

நின்றால் அழுகு, நடந்தாலும் அழகு..! – கவிஞர் இரா .இரவி !


-
எந்த  ஆடையும்
அழகாகின்றன
அவள் அணிந்தால் !
-
நின்றால் அழகு
நடந்தால் அழகோ அழகு
அவள் !

-
ஊட்டம் தரும்
உமிழ்நீர் பரிமாற்றம்
முத்தம் !.
-
சிமிட்டாமல் பார்ப்பதில்
சிங்காரி வென்றாள்
தோற்றேன் நான் !

-
——————-
–கவிஞர் இரா .இரவி !

கவலையும் காணாமல் போகும்…! – கவிஞர் இரா .இரவி !


கண்களில் தொடங்கி மூளையில் பதிந்து
உதட்டில் வழியும்
காதல் !
-
இணையற்ற இணை
என்றனர்
எங்களை !

-
காணமல் போகும்
கவலை
அவள் சிரித்தால் !
-
இருட்டிலும்
ஒளிர்கின்றன
அவள் விழிகள் !

-
வாசனை திரவியங்கள்
தோற்றன
கூந்தல் வாசம் !
-
==========================
கவிஞர் இரா .இரவி !

சொல்லில் அடங்காது சொன்னால் புரியாது – கவிஞர் இரா .இரவி !

-

நினைவலை தொடரும்
மகிழ்ச்சி பரவும்
காதல் !
-
முகம் மலரும்
அகம் குளிரும்
காதல் !

-
சிறகுகள் முளைக்கும்
சிந்தனை பறக்கும்
காதல் !
-
சொல்லில் அடங்காது
சொன்னால் புரியாது
காதல் !

-
ஊடல் இன்றி
ஒருவரும் இல்லை
காதல் !
-
——————-
கவிஞர் இரா .இரவி !

 

ஒன்றும் ஒன்றும் இரண்டல்ல – கவிஞர் இரா .இரவி !


கவிதை வழங்கும்
அட்சயப் பாத்திரம்
காதல் !

முக்காலமும்
பாடு பொருள்
காதல் ! 

மூன்றெழுத்து முத்தாய்ப்பு
மூச்சு இருக்கும்வரை நினைப்பு
காதல் !

ஒன்றும் ஒன்றும்
இரண்டல்ல ஒன்று
காதல் ! 

கவிதை வரும்
விதையென வளரும்
காதல் !

-

——————————–

கவிஞன் இரகசியம் – கபிலன் வைரமுத்து

-
கண்கள் இரண்டிலும் ஒரு
கானக மயக்கத்தை ஊற்றிக் கொண்டலைவான்
-
ஒரு நதியின் மீது
பறவையின் நிழல் தூவி
மனப்பரப்பில் எப்பொழுதும் நகர்த்திக்கிடப்பான்
-
எல்லா சாலைகளிலும் அவன் பாதங்களால் சில
பூக்களைச் சந்திக்க முடிகிறது
பால் வீதியில் இருக்கிறது அவன் ஜன்னல்
அதன் வழியே
ஆச்சரியங்களைத் தேடுவதும் அதில்
மூர்ச்சையாவதுமே அவன் பொழுது போக்கு
-
இன்பம் துன்பம
இரண்டையும் வடிகட்டியகணங்களை
தயார் செய்ய முடிகிறது அவனால்
-
பழைய சோகங்களை பாதுகாப்பதில்
தீவிரம் காட்டுவான்
-
மௌனத்தை காவலுக்கு வைத்துவிட்டு
பிலபஞ்சத்தைத் தனக்குள் பிழிந்து கொள்கிறான்
-
காகிதத்தில் கப்பல் செய்வது குழந்தை
உலகத்தில் சொர்க்கம் செய்வது கவிஞன்
-
—————————-
>கபிலன் வைரமுத்து

கறுப்பினப் பெண் கவிஞர் மாயா ஏஞ்சலோ காலமானார்
-
கறுப்பினப் பெண் கவிஞர் மாயா ஏஞ்சலோ (86 வயது)
அமெரிக்காவில் உள்ள தனது இல்லத்தில் புதன்கிழமை
மரணமடைந்தார்
-
ஆசிரியையாக, கலைஞராக, களப் போராளியாகப் பன்
முகங்களோடு வாழ்ந் தவர் மாயா. சம உரிமை,
அமைதிக்கான போராட்டத்தில் எப்போதும் முன்னணியில்
இருந்தவர்.

கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது என்று எனக்குத் தெரியும்
என்று பெயரிடப்பட்ட தனது சுயசரிதையின் மூலம்
சர்வதேச அங்கீகாரத்தை பெற்ற மாயா ஏஞ்சலோ ஐம்பதுக்கும்
மேற்பட்ட விருதுகளை வென்றிருக்கிறார்.
-
தனது சுயசரிதையின் மூலம் கறுப்பின மக்களின்,
ஒடுக்கப்பட்ட பெண்களின் பிரதிநிதியாக உருவெடுத்தார்.
கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது என்று எனக்குத் தெரியும்
நூலின் முதல் பாகம் அமெரிக்க ஆப்பிரிக்க பெண்ணின்
தனிப்பட்ட வாழ்க்கையை, அதன் குரூரங்களைப் பேசிய
முதல் புத்தகமாகச் சித்தரிக்கப் படுகிறது.

இனவெறியால் ஒடுக்கப்பட்ட ஒரு வாழ்க்கையை
இலக்கியமும் மன உறுதியும் எப்படி மீட்டெடுக்கின்றன
என்பதை விவரிக்கும் புத்தகம் அது.

கறுப்பின இலக்கியத்தின் எழுச்சியாகவும் கறுப்பினப்
பெண்ணிய இலக்கியத்தின் முன்னோடியாகவும்
மாயா ஏஞ்சலோவின் படைப்புகள் திகழ்ந்தன.

ஏஞ்சலோவின் வாழ்க்கையும் அவர் படைப்புகளும் உலகின்
எந்த மூலையிலும் ஒடுக்கப்படும் மனிதர் களின் மீட்சிக்கான
உத்வேகத்தைத் தரும்.
-
————————————-
–தி இந்து நாளிதழ்

உடல் உறுப்புகள் தானம் – த்ரிஷாவை தொடரும் சோனா


கமல்ஹாசன் ஏற்கனவே தனது உடலை தானம்
செய்வதாக முறைப்படி எழுதிக் கொடுத்துள்ளார்.

தற்போது நடிகை த்ரிஷாவும் தனது உடல்
உறுப்புகள் அனைத்தையும் தானம் செய்துள்ளார்.

இந்த நல்ல விஷயத்தை தனது ரசிகர்களும்
பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்
கொண்டுள்ளார்.

இந்நிலையில் ஜுன் 1 தனது பிறந்தநாள் அன்று
தனது உடல் உறுப்புகளை தானம் செய்யப்
போவதாக நடிகை சோனா அறிவித்துள்ளார்.
-
———————————

ஓ…இன்று சம்பள நாள்…!

கோயிலில் தீப ஆராதனை
மனசுக்குள் வெளிச்சமிட்டது
வாசலில் என் பாதணி
-
————————
-
கோழி மிதித்த குஞ்சு
அடித்தாலும் தாய் மார்பைத்
தேடும் குழந்தை

-
————————
-
தோளில் ஏறிக்கொண்டு
அழுத்துகிறது சோகம்!
ஓ…இன்று சம்பள நாள்..!
-
———————-

>பாவலர் கருமலைப்பழம் நீ
(மனதிற்குப் பிடித்த மழைத்துளிகள்)

_________________

வீதி உலாவரும் யானை..!


-
-
சிறு வயதில் ரசித்த உணர்வுகள்
முதுமையிலும் மாறாமல்  தொடர்கிறது
வீதி உலாவரும் யானை..!
-
———————–-
-
வயதைச் சொல்கிறதா?
வாழ்க்கையைச் சொல்கிறதா?
வந்து போகும் பிறந்த நாள்

-
————————–
-
கவிதை எழுதிய காகிதம்
குழந்தையின் கையில்
ஓ! அறிவுக்கு அழகின் அங்கீகாரம்
-
———————–

>பாவலர் கருமலைப்பழம் நீ
(மனதிற்குப் பிடித்த மழைத்துளிகள்)

« பழைய வரவுகள் புதிய வரவுகள் »

Follow

Get every new post delivered to your Inbox.

Join 91 other followers