காலையில் கையில் பிரஷ்ஷோடு பல்துலக்க கொல்லையில் காலெடுத்து வைத்த என்னை வரவேற்றது கன்றின் கழுத்து மணியோசையும், சாந்திக்காவின் குரலும்தான். “இந்த வாட்டியும் ரெண்டே நாளுதானாம்மா?” என்றவளுக்கு சிரித்துக் கொண்டே தலையை ஆட்டினேன். வாரம் விட்டு ஒரு வாரம் நான் ஊருக்கு வருவதும், சாந்திக்கா இப்படி அலுத்துக் கொள்வதும் வாடிக்கைதான். ஏதேனும் பண்டிகை வந்தால் அந்த வாரயிறுதியோடு சேர்த்து விடுமுறை எடுத்துக் கொண்டு வரும்போது இந்தக் கேள்விக்கு பதிலாய் “இப்பவாவது நாலு நாள் இருப்பியா?” என்று கேட்பதும், இருப்பேன் என்று சொன்னதும் யாரும் நினைவு படுத்தாமலேயே இரவு எனக்குப் பிடித்த மருதாணியை அரைத்துக் கொண்டு வந்து தருவதும், தினசரி அம்மாவுக்கு கொண்டு வந்து தரும் மல்லிச்சரத்தின் நீளத்தை அம்மாவே மறந்தாலும் அதிகரித்துத் தருவதும் சாந்திக்காவின் ஸ்பெஷாலிட்டி.
எனக்குச் செய்வதை என்றில்லை எந்த வேலையையுமே ஒரு முறை சொல்லிவிட்டால் போதும், மறுமுறை நினைவுபடுத்த வேண்டுமென்பது தேவையேயில்லை. அவரின் 25 வயதுக்கு அவரின் நிதானமும், பொறுமையும், வேலைகளில் காண்பிக்கும் சாமர்த்தியமும் அபாரம்தான். அவரின் திறமைகளை கண்டு வியக்கும் போதெல்லாம் எனக்கு வரும் அதே கேள்வி இப்போதும் என்னுள்ளே எழுந்தது “இவரெப்படி அப்படி ஒரு சறுக்கலுக்கு ஆளானார்?”
அதற்குள் உள்ளிருந்து அம்மாவின் ஃபில்டர் காபி மணம் மூக்கை துளைக்க வேகவேகமாய் பிரஷ் செய்து முடித்து விட்டு உள்ளே செல்லத் திரும்பினேன். அப்போதுதான் உறைத்தது சாந்திக்காவின் வாலை காணவில்லை என்பது – வேறொன்றுமில்லை அவரது செல்ல மகன் கோபிதான். அவன் ஒரு தண்ணீர் பிசாசு – அக்கா பாத்திரம் கழுவும் போதும், துணி துவைக்கும் போதும் தண்ணீரிலேயே துளைந்து கொண்டிருப்பான். பின் அக்கா வீடு கூட்டும் போதும், மாட்டுக் கொட்டில் கூட்டும் போதும் புழுதியில் அளைவான்.
“ஏன்க்கா, தண்ணீல இப்படி அளையறானே, சளி கிளி பிடிச்சுக்கப் போவுது, வீட்டுல விட்டுட்டு வரக்கூடாதா?” என்றால் அவரின் ரெடிமேட் பதில், “அம்மா களையெடுப்புக்கு போயிருக்கு. யாருகிட்டம்மா விட்டுட்டு வரது? நீயொன்னும் கவலைப்படாதே, ஆண்டவன் அந்தஸ்துக்கு தகுந்தா மாதிரிதான் உடம்பையும் படைப்பான். அவனுக்கு ஒன்னும் பண்ணாதும்மா” என்று சிரித்துக் கொண்டே சொல்வார். ஆனாலும் வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் வலி அவரது கண்ணில் தெரியும்.
சாந்திக்காவின் அப்பா உயிரோடு இருந்த போது அவர்கள் இருந்த கணபதி அக்ரஹாரத்திலிருந்து காரில் வந்து எங்களூர் கான்வென்ட்டில் படித்துக் கொண்டிருந்தவர் அவர். எட்டாம் வகுப்போடு அவரது கல்வி நின்று போனதின் காரணம் அவரது தந்தையின் திடீர் மரணம் மட்டுமல்ல, அவர் வைத்துவிட்டுப் போயிருந்த கடன் சுமைகளும்தான். வீடு, கார், நிலம் என எல்லாவற்றையும் விற்று அந்தக் கடன்களையெல்லாம் அரையும் குறையுமாய் கொடுத்து தீர்த்துவிட்டு தன் அண்ணன் குடும்பத்தோடு போய் ஐக்கியமானார் சாந்திக்காவின் அம்மா.
எங்கோ ஒடிக்கொண்டிருக்கும் நினைவுகளை ஒதுக்கி, “என்னக்கா, கோபி எங்க?” என்றேன். சாந்திக்கா சிரித்துக் கொண்டே, “அம்மா இப்பல்லாம் வீட்டோடதாம்மா இருக்காங்க, காட்டு வேலைக்கெல்லாம் போறதில்லை. அதுனால இந்த பயலையும் வீட்டுலதான் விட்டுட்டு வரேன். அத்தோட இப்பல்லாம் நானும் உங்க ஒரு வீட்டு வேலதான் செய்யறேங்கறதால சீக்கிரமவும் திரும்பி போயிடறேன். அவனுக்கும் ஸ்கூலுக்கு சீக்கிரமா கிளம்பி போகணும்னெல்லாம் ஞானோதயம் வேற வந்திருக்கு” என்று மலர்ந்து சிரித்தவாறே வேலையை தொடர்ந்தார். நானும் காபி ஜபத்தோடு உள்ளே திரும்பினேன். மதியம் சாப்பிட்டுவிட்டு பேசிக் கொண்டிருக்கும் போதுதான் அக்கா சொன்னதின் முழுப் பொருளும் உறைத்தது.
“ஏம்மா, சாந்திக்கா இப்பல்லாம் நம்ம வீட்டுல மட்டுந்தான் வேல செய்யறாங்களாம். அவங்க அம்மா கூட காட்டு வேலைக்கெல்லாம் போறதில்லைன்னாங்க. எப்படி சமாளிக்கறாங்க?”
“இந்தப் பக்கத்துலயும் இப்பல்லாம் இந்த மகளிர் சுய உதவி குழுவெல்லாம் ரொம்ப மும்மரமா நடக்குதும்மா. இவ அதுல முன்னாடி நிக்கறா. முதல்ல மத்தியானத்துல நம்ம கலைமணி சார் வீட்டுக்காரம்மா கிட்ட தையல் கிளாஸ் போனா. இப்ப அந்த குழுவுல ரொட்டேஷன்ல கிடைக்கற காச வச்சு ஒரு செகன்ட் ஹான்ட் தையல் மிஷின வாங்கி போட்டிருக்கா வீட்டுல. நல்லா தைக்கறா. அவ சுறுசுறுப்புக்கு கேக்கணுமா? மொதல்ல அவ மத்த வீடுங்கள்ள செய்யறத நிறுத்தினா. இப்ப அம்மாக்காரியையும் காட்டுக்கும் களத்துக்கும் போக வேணாம்னு வீட்டோட உக்கார வச்சிட்டா. இன்னும் சொல்லப்போனா அவ அம்மா இப்ப சாந்திக்கு நல்ல ஒத்தாசையா இருக்கா – ஊக்கு கட்டுறது, ஹெம்மிங்க் போடுறதுன்னு. நல்ல வருமானம். இருந்த பழைய கடனையெல்லாம் சிறுக சிறுக அடச்சிட்டா. புள்ளய நல்லா படிக்க வச்சுடனும்ன் ஒரு வெறின்னே வெச்சுக்கோயேன். ரெண்டு மூணு சீட்டு கட்டறா. நம்ம பக்கத்து வீட்டு மாமிகிட்ட நாந்தான் சொல்லி விட்டேன். நானே இப்பல்லாம் அவகிட்டதான் ஜாக்கெட் தைக்க கொடுக்கறேன். சுடிதார்லாம் கூட நல்லா தைக்கிறேன்னு அவளே சொன்னாம்மா. உனக்கும் எதுனா கொடுக்கணும்னா மெட்ராஸ்ல நூறு எரணூறூன்னு காச வீணடிக்காத. ஊருக்கு வரப்ப இவகிட்டயே கொண்டு வந்து குடு. அவளுக்கும் ஒரு லாபம், நமக்கும் ஒரு லாபம். என்ன சொல்றே?”
“பரவாயில்லையேம்மா. கேக்கவே சந்தோஷமா இருக்கு.”
“ஆமாம்மா, நல்ல புத்திசாலிப் பொண்ணுதான், என்னமோ இன்னும் கொஞ்சம் சுதாரிப்பா இருந்திருந்தா இன்னிக்கு அவ இருக்க வேண்டிய இடமே வேற. எல்லாம் தலையெழுத்துதான் போ…”
பெருமூச்சோடு எழுந்து அம்மா காபிக்கடையை பார்க்கப் போனார். நானும் பின்னாலேயே போய் சமயற்கட்டின் பக்கவாட்டு கதவைத் திறந்து வைத்துக் கொண்டு அதற்கு அருகில் அமர்ந்தேன். வேப்பமரம் கண்ணில் பட்டதும்தான் முன்னெல்லாம் பின் மதியம் 2 மணிக்கெல்லாம் பூக்கடையிலிருந்து உதிரி பூக்களை அளந்து வாங்கி கொண்டு வந்து அங்கே வைத்துதான் சாந்திக்கா கட்டிக் கொண்டிருப்பார் என்பது நினைவுக்கு வந்தது.
அம்மா இந்த பக்கவாட்டு கதவை திறந்து வைத்துக் கொண்டு வேப்பமரத்து மேடையிலோ இல்லை இங்கே இந்த வாசற் படியிலேயே உட்கார்ந்து கொண்டு அவரோடு சாவகாசமாக பேசிக் கொண்டிருப்பது வழக்கம். அப்பா எழுந்து வந்ததும் கலக்கப்படும் காபியில் சாந்திக்காவுக்கும் அருகிலேயே புழுதியில் விளையாடிக் கொண்டிருக்கும் கோபிக்கும் ஒரு டம்ப்ளர் நிச்சயம் உண்டு. திரும்பி அம்மாவிடம் “அப்போ அக்கா இப்பல்லாம் பூவும் கட்டறதில்லையா?” என்றேன்.
“ஆமாம்மா, ஆனாலும் நம்ம வீட்டுக்கும் கோவிலுக்குமான பூவை மட்டும் அளந்து வாங்கிட்டு வந்து கட்டி பையங்கிட்டயோ இல்லை அவ அம்மாட்டயோ கொடுத்து விட்ருவா. அட, அவட்ட இன்னிலேர்ந்து நீ இருக்கற வரைக்கும் கொஞ்சம் கூடுதலா பூ கொடுத்துவிடச் சொல்ல மறந்துட்டேன் பாரு…”
ஆனால் அம்மா நினைவு படுத்தாவிட்டாலும் கூட அக்கா வழக்கம் போல ஞாபகமாய் அதிகப்படி பூவை கொடுத்து விட்டிருந்தார். புன்னகையோடு அதை சாமி படங்களுக்கு சாத்திவிட்டு விளக்கேற்றினார் அம்மா. அடுத்தடுத்த முறை ஊருக்குச் செல்லும் போதெல்லாம் அக்காவின் முன்னேற்றம் பற்றிய செய்திகள் அடுக்கடுக்காய் காதில் விழுந்து கொண்டிருந்தது.
முதல் மிஷினின் கடனை அடைத்து எம்ப்ராயிடரி வசதிகளோடு கூடிய அடுத்த மிஷினும் வாங்கியிருந்தார். கும்பகோணத்தில் சில பெரிய ஜவுளிக் கடைகளிலிருந்து ப்ளெயின் புடவைகளை வாங்கி வந்து எம்பராயிடரி வேலைப்பாடுகளுடனான புடவைகளாக மாற்றி அனுப்பி வைத்துக் கொண்டிருந்தார். தனக்கு கீழே ஒரு பெண் வேலை செய்யுமளவு வளர்ந்த பின்னும் கூட அம்மாவின் மேலிருந்த நன்றி உணர்ச்சி காரணமாய் எங்கள் வீட்டுக்கு மட்டும் வந்து போய்க் கொண்டிருந்தார்.
“வேணாம்மா, நான் வேற யாருன்னா ஏற்பாடு பண்ணிக்கறேன்” ன்னு அம்மாவே சொல்லியும் கூட, “உங்களுக்கு வேறென்ன செஞ்சு நான் பட்ட கடனை அடைக்க முடியும்மா? இதுல ஒன்னும் எனக்கு கௌரவம் குறைஞ்சுடப் போறதில்லை” என்று சொல்லி வாயடைக்க வைத்துக் விட்டுப் போய்க்கொண்டே இருந்தார்.
ஒரு முறை ஊருக்குப் போயிருந்த போது பின் புற மாடி வராண்டாவில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். கீழே அம்மாவும், சாந்திக்காவும் பேசிக் கொண்டிருந்ததும் காதில் விழுந்து கொண்டிருந்தது.
gஏம்மா, நேத்து ராத்திரி உங்க வீட்டுல எதோ சத்தமாயிருந்ததே, என்னாச்சு? நான் முழிச்சு, என்னான்னு புரிஞ்சுகிட்டு இவரை எழுப்பி, ஓடுங்கன்னு சொன்னேன். இவரும் மேல்துண்டை தேடி எடுத்து போட்டுகிட்டு, கதவை திறந்து கீழே இறங்கும் முன்னாடி உங்க வீட்டுல சத்தம் முடிஞ்சு லைட்டெல்லாமும் அணைஞ்சுடுச்சு. சரி, அந்நேரத்துக்கு மேல வந்து விசாரிக்க வேணாமேன்னு திரும்பி வந்துட்டார். என்னதாம்மா பிரச்சனை? துரையோட காலனிக்குள்ள வந்து பிரச்சனை பண்ற அளவுக்கு யாரு இருக்கா? துரையானும் வந்திருந்தாரா?”
“ஆமாம்மா, துரையண்ணன் வந்துதான் அந்த ஆளை மிரட்டி அனுப்பினாரு. “
“அந்த ஆளுன்னா, கோபியோட அப்பனா?” என்ற அம்மாவின் வியப்பு குரலிலேயே தெரிந்தது.
“ஆமாம்மா” என்ற சாந்திக்காவின் குரல் கம்மியது.
“இத்தனை வருஷம் கழிச்சு, அதும் அர்த்த ராத்திரிலதான் உன் நினைப்பு வந்துச்சாக்கும் அவனுக்கு.”
“என்னமோம்மா, அன்னிக்கு ஊர்லேர்ந்து கிளம்பி கும்பகோணத்துக்கு ஒரு வேலையா போனாராம். போன இடத்துல ரொம்ப நேரமாகவும், நம்மூர் வந்து சேரவே பத்தாயிருச்சாம். அந்நேரத்துக்கு மேல ஊருக்குப் போக முடியாதில்ல? சைக்கிள்லயும் வரலை போல. மினி பஸ்ஸெல்லாம் 10 மணியோட சரி இல்ல? அப்பத்தான் புள்ள நினைப்பு வந்துச்சாம். தங்கவும், திங்கவும், தூங்கவும் காசு செலவில்லாமலும் இருக்கும். அத்தோட ஒரு நாள் பொண்டாட்டிய விட்டுட்டு இருக்கற தவிப்பும் இல்லாம இருக்குமில்ல?”
“அது சரி, இப்படி வந்துட்டு போறப்பெல்லாம் எட்டி பாத்துட்டு போறதுக்கு நீ என்ன லாட்ஜா நடத்திகிட்டிருக்க? கோபி வயத்துல இருந்தப்ப ஊர் பஞ்சாயத்துல உன்னைய அதுக்கு முன்னாடி பாத்ததேயில்லைன்னு சொன்னவன் தானே அவன்? இப்ப மட்டும், உன்னை பாத்ததும் பழகினதும் ஞாபகத்துக்கு வந்துதாமா அந்த துஷ்யந்தனுக்கு?”
“அப்பன் செத்து நின்னப்ப அடைக்கலம் கொடுத்த சொந்த தாய் மாமனோட பொண்ணு வாழ்கையவே பங்கு போட பாத்தியாடி, நன்றி கெட்டவளேன்னு ஊரே தூத்திச்சு என்னைய. ஆனா, அந்த மாமனோட மாப்பிள்ளை இந்த பிள்ளைக்கும் எனக்கும் சம்பந்தமேயில்லைன்னு சத்தியம் பண்ணினாரு. ரெண்டையும் ஒத்துக்கிச்சு எங்க ஊரும், ஊர் பஞ்சாயத்தும். எப்படின்னுதான் எனக்கு புரியலை. நான் பண்ணினதும் தப்புதான், இல்லங்கல. ஆனா, நான் மட்டும் தனியா செய்யக் கூடிய தப்பா அது? என்னமோம்மா, இவங்களும், இவங்க ஞாயமும். உள்ள வந்தா குடிய கெடுத்துருவேன்னு ஊர்ல எல்லாரும் பயந்துகிட்டிருந்தப்ப, நீங்க மட்டுந்தானேம்மா என்னைய வீட்டுல உள்ளற விட்டு வேலை செய்ய வச்சு ஒரு வருமானத்துக்கு வழி செஞ்சீங்க. துரையண்ணங்கிட்ட பேசி வாடகைக்கு வீடு பிடிச்சு விட்டீங்க. அதெல்லாம் இல்லைன்னா, இன்னிக்கு நானும் என் அம்மாவும் என்ன கதில இருந்திருப்போம்னு எனக்குத் தோணவே இல்லை.
யோசிச்சு பாத்தா எனக்கும் இப்பத்தான் இந்த ஆளோட கணக்கெல்லாம் புரியுதும்மா. அன்னிக்கு பஞ்சாயத்துல என் பிள்ளைதான்னு ஒத்துகிட்டிருந்தா, எனக்கும் என் பிள்ளைக்குமான செலவெல்லாம் அந்தாள் தலைல்ல இல்ல விழுந்திருக்கும்? ஆனா இன்னிக்கு நான் என் காலை ஊணி நின்னுட்டேன். இனி வந்துட்டு போறா மாதிரி இருந்தா எல்லா விதத்துலயும் சவுரியம் பாருங்க… அதான் இப்ப என் நினைப்பு வந்திருக்கு. ஆனா இன்னமும் நான் அன்னிக்கு இருந்தா மாதிரியே விவரமில்லாம இருப்பேன்னு நினைச்சார் பாருங்க, அதான்மா எனக்கு ஆறலை. எனக்கும் வேகமும், ஆசையும் இருக்குதான். ஆனா, ஒரு நாள் உணர்ச்சிவசப் பட்டுட்டு பின்னாடி ஆயுசுக்கும் அவமானப் படற அளவுக்கு புத்தியில்லாதவளாவே நானும் இருந்துட முடியுமாம்மா?”
அவர்களின் பேச்சு என்னை படிக்கவிடாமல் என்னவோ செய்தது. படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை விடவும் சாந்திக்கா போன்ற சொரணையுள்ள மனிதர்களிடம் கற்றுக் கொள்ள நிறையவே இருப்பதாக தோன்றியது எனக்கு.
——————————–
நன்றி;
http://www.vikatan.com/vc/2009/wmalar/lakshmistory050309.asp