-
கேள்வி:
உங்களுடைய ‘ப்ரே ஃபார் மீ பிரதர்’ ஆல்பம் இந்தியாவிற்கு
மட்டும் என்றில்லாமல், உலகளாவிய மனித குலத்திற்கான
கருத்துகளைக் கொண்டிருந்தது.
இதற்கான எண்ணம் உங்களுக்கு எப்படித் தோன்றியது?
-
ரஹ்மான்:
கிறிஸ்துவர்களை எடுத்துக்கொண்டால் ரெட்கிராஸ், பள்ளிகள்
இப்படிப் பலவற்றை நிறுவி, நல்ல விஷயங்களை செய்துவிட்டுப்
போயிருக்கிறார்கள்.
நாம் பழைய காலத்தில் செய்திருக்கிறோம். இப்போது பங்களிப்பு
மிகவும் குறைவாக இருப்பதாகத் தோன்றுகிறது. அதாவது,
மனிதகுலத்திற்கு இந்தியாவுடைய பங்களிப்பு குறைவாக இருக்கிறது
என்கிறேன்.
இன்னும் நிறையச் செய்திருக்கலாம். இந்த எண்ணமே எனக்கு
அப்படி ஓர் ஐடியாவைக் கொடுத்தது. நாம் 1.3 பில்லியன் மக்கள்
இருக்கிறோம். ஐடியாக்கள், தலைமைப்பண்பு என்று பார்த்தால்
ஒன்றுமே இல்லை.
ஊழல் நிறைந்த அரசாங்கங்கள் இருக்கின்றன. ஊழல் மலிந்துபோய்
விட்டது. ஆனால், இளைஞர்கள் தலைமை பதவிக்கு வந்தால்
மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
கிரிக்கெட்டில் சச்சின், சாஃப்ட்வேரில் நாராயணமூர்த்திபோல
வெவ்வேறு துறைகளில் ஒருசிலர் மட்டுமே இருக்கிறார்கள்.
ஆனால், நாட்டில் எல்லோருடைய கவனமும் சினிமாவில் இருக்கிறது.
ஒரு சுதந்திரமான ஐடியாவை வைத்துக்கொண்டு, அந்த
ஐடியாவின்மேல் நம்பிக்கை வைத்து அதை ஊக்கப்படுத்த நிச்சயமாக
இங்கே ஆட்கள் இல்லை.
அமெரிக்காவில் நிலைமை இப்படி இல்லை. அங்கே இந்தியர்களேகூட
பெரிய பணக்காரர்கள் இருக்கிறார்கள். ஆனால், இங்கே ஏதாவது
புதிதாக முயற்சித்தால் ‘அதெல்லாம் வொர்க் அவுட் ஆகாது மச்சான்’
என்று சொல்லி விடுவார்கள். முளையிலேயே கிள்ளிப்போட்டு விடுவார்கள்.
ஆனால், இப்போது மாற்றம் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக புதிய
தலைமுறை மாறிக்கொண்டு இருக்கிறது. ஒரு நல்ல நோக்கமிருந்து
அதற்காகச் செயல்பட்டால், உடனே விளைவை எதிர்பார்க்கக்கூடாது.
பொறுமை வேண்டும். ஐந்து வருடமோ, பத்து வருடமோ கழித்து
வரலாம். அதற்கு மேலும்கூட ஆகலாம். காத்திருக்க வேண்டும்.
ஆனால், நம்பிக்கை வேண்டும்.
இப்போது கஷ்டப்பட்டால், இந்த வருஷத்தைவிட அடுத்த வருஷம்
நல்லாயிருக்கலாம். அடுத்த வருஷம் கஷ்டப்பட்டால், அதற்கடுத்த
வருஷம் நல்லாயிருக்கலாம் என்று நினைக்க வேண்டும். ஆனால்,
நாம் இப்போதே ஒரு ஐடியாவை எடுத்துக்கொண்டு நாளைக்கே
அதன் விளைவை எதிர்பார்க்கிறோம்.
பொறுமையோடு காத்திருக்க வேண்டும்.
-
====================================
நன்றி: http://kalyanje.blogspot.com/2010/04/blog-post.html