உறவு -குறுங்கவிதை (ஜெகதீஸ்வரன்)

உறவு

இரவுப்பயண பேருந்தில்
மடியில் உறங்குவதும்
மார்பில் விளையாடுவதுமாய்
எனக்குமுன் ஒரு இளம் ஜோடி

அசைவில்லா பேருந்தால்
தூக்கம் கலைந்து கீழிறங்குகிறேன்
உந்துதல் தவிர்ப்பதற்காக

தேநீர் அருந்துகையில் அவன்
எனக்கு அறிமுகம் செய்கிறான்
தன் தங்கையென அவளை!

———————————————-

படித்ததில் பிடித்தது

http://sagotharan.wordpress.com/2009/12/02

ரோஜா வாசம் !


சிகப்பு ரோஜா

நீ தொட்டுத் தந்த ரோஜா வாசம்

அறையில் வீசுதடி! – நீ

விட்டுச் சென்ற கூந்தல் வாசம்

அதனை மீறுதடி!

ஏழை ! (கவிதை)

ஏழையின் சிரிப்பில்

இறைவனைக்

கண்டேன்.

சிரித்து முடித்த

கடவுள்

தலை சொறிந்து

தயக்கமாய்க்

கேட்டார்………

‘’ஒரு ஆயிரம் ரூபா

கைம்மாத்து

கிடைக்கும்ங்களா?’’

*************************************

நகரம்

——————
காகம் கரைகிறது

‘’சீக்கிரம்

கிளம்புடி

சினிமாவுக்குப்

போகலாம்!’’

>எம்.கோசலைராமன்,காங்கேயம்

*********************
நன்றி; குமுதம் 1-10-08

குறுங்கவிதைகள்

இனி எனது குறுங் கவிதைகள்…

–0–0–0–0–0–0–0–

தண்ணீர்க்குடம்

எத்தனை முறை தூக்கிலிட்டாலும்
உயிர் பிரியாமல் உறவாடும்
உலோக உயிரி..!

–0–0–0–0–0–0–0–

பிச்சைக்காரன்

நிகழ்கால சோகந்தன்னை
எதிர்காலம் வென்றிடவே
ஏந்துகிறான் திருவோடை..!

–0–0–0–0–0–0–0–

வேண்டுதல்

குந்த குடிசை வேணும்
கடவுளே..?
வேண்டுதல்
அரச மரத்துப் பிள்ளையாரிடம்..!

–0–0–0–0–0–0–0–

எயிட்ஸ்

நவயுக
எமதர்மனின்
கலியுக
எமவாகனம்..!

–0–0–0–0–0–0–0–

கடியாரம்

கால தேவனை
நொடிக்குள் அடக்கும்
எந்திரக்குருவி..!

–0–0–0–0–0–0–0–

கருமி

எதிர்காலம் சிறக்க
நிகழ்கால வாழ்வை
சிதைக்கும் கிருமி..!

–0–0–0–0–0–0–0–

அகிம்சை

அண்ணலின் ஆயுதமாம்
அகிம்சை..!
இங்கேயும் ‘ஆயுதம்’..!

–0–0–0–0–0–0–0–

எரிமலை

பூமித்தாயின்
சிவப்பு
எச்சில்..!

–0–0–0–0–0–0–0–

இயந்திர மனிதர்கள் (ரோபோக்கள்)

கலியுக பிரம்மாக்கள்
படைத்த
நவயுக மானி(ட்)டர்கள்..!

–0–0–0–0–0–0–0–

குளோனிங் முறை

மெய் ஞானம் கொண்ட
விஞ்ஞான மனிதர்களின்
அஞ்ஞான முயற்சி..!

–0–0–0–0–0–0–0–

முதுமை

மானுட காவியத்தின்
கடைசி
அத்தியாயம்..!

–0–0–0–0–0–0–0–

மரணம்

மனிதமெனும் சரித்திரத்தில்
கடைசி வாக்கியத்தின்
முற்றுப்புள்ளி..!

–0–0–0–0–0–0–0–

திருக்குறள்

தருமி எனும் தமிழ்மக்களுக்கு
தெய்வப்புலவன் தந்த
பொற்கிழி..!

–0–0–0–0–0–0–0–

பள்ளி…

தமிழுக்கு தொண்டு செய்த
ஔவையின் நினைவாக
ஒரு பள்ளி – பெயர் மட்டும்
ஔவையார் அகாடமி..!

–0–0–0–0–0–0–0–