மனிதம் வளர்ப்போம்..

-
கண்ணுக்கு அழகு எது? கண் மை தீட்டுவதா?
இல்லை..மற்றவர்கள் மீது கருணை பொழிதல்

காலுக்கு அழகு எது? கொஞ்சும் சலங்கைகளா?
அல்ல, பிறரிடம் யாசிக்க – கடன் கேட்க செல்லாமை.

ஆராய்ச்சிக்கு அழகு எது? பட்டமும் ஞானச் செருக்குமா?
அல்ல.ஒன்றைத் தெளிவாக அறுதியிட்டு உரைத்தல்.

இப்படியே ஒவ்வொன்றுக்கும் எது அழகு எது அழகு
என்று வினா எழுப்பி மனித நேயத்தோடு விடை
கண்டால் உலகே அன்பு மயமாகி விடும்.
மகிழ்ச்சி வெள்ளமே எங்கும் சூழும்.
-
சிறு பஞ்ச மூலப்பாடல் இதைத்தான் அழகுற
சொல்கிறது:-
——————————————————–
கண் வனப்புக் கண்ணோட்டம்;

கால் வனப்புச் செல்லாமை;

எண் வனப்பு, ‘இத் துணை ஆம்’ என்று உரைத்தல்;

பண் வனப்புக் கேட்டார், நன்று என்றல்;

கிளர் வேந்தன் தன் நாடு வாட்டான், நன்று என்றல்
வனப்பு.

கண்ணுக்கழகு கண்ணோட்டம்,

காலுக்கழகு பிறரிடம் பிச்சை கேட்க செல்லாமை,

ஆராய்ச்சிக்கு அழகு தன்கருத்துக்களைத் யாருக்கும்
பயப்படாமல் துணிந்து சொல்லுதல்,

இசைக்கு அழகு அந்த இசையை கேட்பவர் நன்று
என்று கூறுதல்,

அரசனுக்கு அழகு அவனது ஆட்சியில் உள்ள குடிமக்கள்
அவனைநல்லவனென்று கூறுதல்.

—– சிறுபஞ்சமூலம்

பெரிய புராணம்..

பெரிய புராணம் என வழங்கும் திருத்தொண்டர் புராணம்

‘உலகெலாம்’ என்று எடுத்து ‘உலகெலாம்’ என்று முடிக்கப்

படுகிறது, சேக்கிழாரால்.

உலகுஎலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்,
நிலவு உலவிய நீர்மலி வேணியன்,
அலகுஇல் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம்

என்று எடுக்கப்பெற்ற திருத்தொண்டர் புராணம்,

இறுதியில், கலிவிருத்தத்தில் அமைந்த பாடலால்,

என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
மன்றுஉளார் அடியார் அவர் வான்புகழ்
நின்றது;- எங்கும் நிலவி, உலகெலாம்

என்று முடிகிறது.

காவிய கர்த்தா எத்தனை பிரக்ஞை பூர்வமாகச்

செயல் படுகிறார் பாருங்கள்.

=============================

>நாஞ்சில் நாடன்

(செந்மிழ் காப்பியங்கள் – கட்டுரையிலிருந்து)

மேலும் விரிவாகப் படித்து மகிழ :

http://solvanam.com/?p=15914

காதலுக்கு சாட்சி குருகு…!

கூழைக்கடா

-

செங்குருகு

-

குறுந்தொகை 25,
இயற்றியவர் கபிலர்,
குறிஞ்சி திணை  – தலைவி சொன்னது

-

“யாரும் இல்லை; தானே கள்வன்;

தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ?

தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால

ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்

குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே!”

[குறு - 25]

[வேறு யாருடனும் அல்ல, தனக்குத் தானே தான் பொய் சொல்கிறான்.
அவன் அப்படி பொய் சொன்னால் நான் என்ன செய்வேன்?  
நான் அவனைச் சேர்ந்த அந்நாளில் தினைச்செடியின் அடித்தாள் போல்
சிறிய மென்மையான கால்கள் கொண்டதும், ஒழுகும் நீரில் ஆரல்மீனை
பார்த்து அமர்ந்திருந்ததுமான குருகும் அருகே இருந்தது].

-

There were no witnesses
when he embraced me.
If he leaves me now, what can I do?
Only a heron stood by,
its thin gold legs like millet stalks,
eying the aaral-fish,
in the flowing water.   

Translated by E. Annamalai and Harold Schiffman

-

(இணையத்தில் படித்து சுவைத்தது)

http://www.jeyamohan.in/?p=16748

http://sangampoemsinenglish.wordpress.com/one-poem-many-translations/

எப்பொழுது முத்தமிட வேண்டும்?

 

 

 

 

 

 

 

 

இவ்வினாவிற்கு நாம் இக்குறள் அமைந்த இடத்திலிருந்து பொருள்
கொள்வோம்.
-
இக்குறள் “காதற் சிறப்பு உரைத்தல்” என்னும் அதிகாரத்தில்
உள்ளது, இவ்வதிகாரம் ”தகையணங்குறுத்தல்” ”குறிப்பறிதல்”
”புணர்ச்சி மகிழ்தல்” “நலம் புனைந்து உரைத்தல்”
ஆகியவற்றுக்குப்பின் முறையே வைக்கப்பட்டுள்ளது.
-
இதன்வழி, காதலியை கண்டு, அவள் அழகில் மயங்கி
தகையணங்குறுத்தல்), அவளது குறிப்பை உணர்ந்து காதலை
அறிந்து (குறிப்பறிதல்), அவளோடு சேர்ந்து கலக்கையில்
(புணர்ச்சி மகிழ்தல்) அவளின் நலங்களை போற்றி அவளை
நம்வழிப்படுத்திபின் (நலம் புனைந்து உரைத்தல்) அவளை
முத்தமிட வேண்டும் என்று அறிகிறோம்.
-
ஆக, ஒரு குறளில் ஒவ்வொரு சொல்லுக்கும் பொருளைவைத்து
முத்தத்திற்கு இலக்கணம் நல்கியுள்ளார் ஐயர் வள்ளுவர்!
இரண்டடி இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டு நிலைக்கிறது எ
ன்றால் சும்மாவா!
-
ஆதலினால் காதல் செய்வீர் – முத்தம் கொடுத்து நித்தம் மகிழ்வீர்!

*ஆங்கிலத்தில் இவற்றை
‘W5H’ (What, When, Where, Who, Why, How)
என்போம்!

-

=================================

நன்றி: http://vijayanarasimhan.blogspot.com

“ஊடுதல் காமத்திற் கின்பம்

சும்மா சொல்லப்படாது, காமத்துப்பாலில் பின்னி பெடல் எடுத்து விட்டார்
திருவள்ளுவர்.

பரிமேலழகரே திக்கு முக்காடி போய் விட்டிருக்கிறார். அதுவும் கடைசி
இரண்டு அதிகாரங்கள் தூள்.

காமத்துப் பாலில் வரும் கிட்டத்தட்ட ஒவ்வொரு குறளுக்கும் பின்புலன்
தரவேண்டிய அவசியம்.

ஊடல் பற்றிய அதிகாரங்களில் வரும் தலைவியிடம் தலைவன் படும்பாடு
இருக்கிறதே, அதைச் சொல்ல வேண்டும்.

திடீரென தலைவன் தும்ம தலைவி தன்னையறியாது “நீடூழி வாழி” என்று
வாழ்த்துகிறாள். திடீரென நினைத்து கொண்டு “எந்தச் சிறுக்கி உன்னை
நினைத்தாள்? இவ்வாறு திடீரென ஏன் தும்மினாய்” எனக் கேட்டு டார்ச்சர்
செய்கிறாள்.

“வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று”

தும்மலை அடக்கினால் “யாரை என்னிடமிருந்து மறைக்கிறாய்”? என்ற
கேள்வி அம்பாக வருகிறது.

“தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்
எம்மை மறைத்திரோ என்று”

அவள் அழகையே கூர்ந்து பார்த்தால் கூறுகிறாள் வேறு எந்த பொம்பளையோட
என்னை ஒப்பிடுகிறீர் என்று

“நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினர் என்று”

ஆகா தலைவன் கை பட்டாலும் குற்றம், கால் பட்டாலும் குற்றம். அப்படி
இருக்க, எப்போது ஊடல் முடிவது, தன்னுடைய மற்றது தலைவியின் மேல்
படுவது என்ற ஆயாசத்தில் போகிறான் தலைவன்.

தோழி அவளை காரணம் கேட்க, இதெல்லாம் பிறகு வரும் புணர்ச்சியின்
இன்பத்தை அதிகரிக்க என்று கூறி விடுகிறாள் தலைவி.

“இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல்
வல்ல தவரளிக்கும் ஆறு”


“ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்”

ரொம்ப விவரமான தலைவிதான்.

இவ்வாறெல்லாம் வாட்டி விட்டு திருவள்ளுவர் கடைசியில் கூறுகிறார்:

“ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்”

>டோண்டு ராகவன்

ரோமியோ ஜூலியட்.

நன்றி: முகநூல்
——————-

ரோமியோ ஜூலியட்.
இருவர் குடும்பத்திற்குள்ளும் பகை
-
ஒருவிருந்தில்
கலந்துகொண்ட ரோமியோவும் ஜூலியட்டும் அங்கு சேர்ந்து நடனமாடநேர்ந்தபோது
ஏற்பட்ட நெருக்கத்தில் ஒருவர் மனதை ஒருவர் பறிகொடுத்தனர். அவர்கள் காதல்
வளர்ந்தது. குடும்பப் பகை அவள் காதலுக்கு குறுக்கே வந்தது. காதலுக்காக
விஷம் குடித்ததுபோல் நடித்தாள் ஜூலியட். இதை நாடகம் என்று அறியாத ரோமியோ
விஷம் அருந்தி இறக்க, அவன் குடித்து மீதி வைத்த விஷத்தினை அருந்தி
உயிரைவிட்டாள் அவனது காதலி ஜூலியட்.

-
மனிதன் நாகரிகத்தைபற்றி அறிந்து கொள்ள தொடங்கியபோது ஆரம்பமானது இந்த காதல் உணர்வு.

இன்றுவரை காலங்கள் பல மாறினாலும் மறையாமல் வாழ்ந்தும் வளர்ந்தும் வருவது இந்த காதல்

-

காதல் வாழ்க! காதலர்கள் வாழ்க!!

தக்கயாகப்பரணி

ஒரு நூலில் யார் சிறப்பித்துப் பாடப்படுகிறாரோ அவரைப்
‘பாட்டுடைத் தலைவன்’ என்று கூறுவார்கள்.

-
பொதுவாக, நூலில் சிறப்பித்துப் பாடப்படும் பாட்டுடைத் தலைவன்
பெயரையே நூலுக்குப் பெயராக
வைப்பர்.
-
ஆனால் பரணி இலக்கியத்தில் மட்டும் பெயர் வைத்தல் வேறுபட்டு இருக்கும்.

அதாவது, பாட்டுடைத் தலைவனிடம் தோற்றவர்களின் பெயரையோ,
தோற்றவர்களுடைய நாட்டின்
பெயரையோதான் பரணி இலக்கியத்தின் பெயராக
வைப்பர்.
-

தக்கயாகப்பரணியின் பாட்டுடைத் தலைவன் சிவபெருமானாகிய

வீரபத்திரக் கடவுள். சிவபெருமானின் மனைவி பார்வதியின் தந்தை பெயர்
தக்கன்.
இவன் சிவபெருமானை அவமதித்து அவரை அழைக்காமல் ஒரு யாகம்
செய்கிறான்.


-
அதனால்
வீரபத்திரராகிய சிவபெருமான் தக்கனின் யாகத்தை அழித்து
அவனுக்கு உதவிய தேவர்களைத்
தோற்கடிக்கிறார். அதனால் இந்த நூலுக்கு,
தக்கயாகப் பரணி என்ற பெயர் வைக்கப்
பட்டுள்ளது.
-

இந்த நூலை எழுதியவர் ஒட்டக்கூத்தர்.
-
நன்றி: http://www.tamilvu.org/courses/degree/p103/p1034/html/p1034111.htm

கற்கை நன்றே கற்கை நன்றே…!

-

கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே 35

கல்லா ஒருவன் குல நலம் பேசுதல்
நெல்லினுள் பிறந்த பதர் ஆகும்மே 36

நாற்பால் குலத்தின் மேற்பால் ஒருவன்
கற்றிலன் ஆயின் கீழ் இருப்பவனே 37

எக்குடி பிறப்பினும் யாவரே ஆயினும்
அக்குடியில் கற்றோரை மேல் வருக என்பர் 38

அறிவுடை ஒருவனை அரசும் விரும்பும் 39
-
===============================

>அதிவீரராம பாண்டியர் இயற்றிய
வெற்றி வேற்கை (நறுந்தொகை)

பாரதியாரின் வாழ்வில்..

மகாகவி பாரதியார்

 

ஒரு சமயம் பாரதியின் வீட்டருகே ஒரு பாம்பாட்டி வந்தான். அவனைப் பார்க்கக் குழந்தைகளுக்குக் கொஞ்சம் பயமாகவும் அதே சமயம் வேடிக்கையாகவும் இருந்தது. ஒரு பிரெஞ்சுக்காரனின் வீட்டு வேலைக்காரன் பாம்பாட்டிக்குக் காலணா போட்டான். பாரதி தன் நண்பரும் மண்டையும் சீனிவாசாச்சாரியாரின் மகளுமான சிறுமி யதுகிரி மற்றும் சிலருடன் அந்தப் பாம்பாட்டி மகுடி வாசிப்பதையே கேட்டுக் கொண்டிருந்தான்.

-

அவர்களைப் பார்த்ததும் பாம்பாட்டிக்கு ‘குஷியாகி…” விட்டது. உற்சாகமாக ஊதினான். அவன் மகுடி ஊதுவதையே நீண்ட நேரமாய்க் கவனித்துக் கொண்டிருந்த பாரதிக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. சட்டென்று தான் போட்டிருந்த மேலாடையைக் கழற்றி அவனிடத்தில் கொடுத்துவிட்டு வெறும் வேஷ்டியுடன் நின்றான். அதைச் சற்றும் எதிர்பாராத பாம்பாட்டி மனம் மகிழ்ந்து பாரதியை வணங்கி விட்டுச் சென்றான்.

வீட்டுக்குத் திரும்பியதும் பாரதியிடத்தில் யதுகிரி கேட்டாள்…

”ஏன் அந்தப் பாம்புப் பிடாரனுக்குப் போய் உங்கள் சட்டையைக் கழற்றிக் கொடுத்தீர்கள்…”

”எனக்கு நாலுபேர் கொடுக்கத் தயாராயிருக்கிறார்கள்… அந்த ஏழைப் பாம்பாட்டிக்கு யார் கொடுப்பார்கள். நானே அதைப் பற்றி யோசிக்கவில்லை… உனக்கெதற்கு அந்தக் கவலை…?” என்று பாரதி கொஞ்சமும் தாமதிக்காமல் சிரித்தபடி சொல்ல, யதுகிரி அவரையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

மறுநாள் மாலையில் பாரதி, தான் எழுதிய சில தேசியக் கவிதைகளை நண்பர்களிடத்தில் பாடிக்காட்டிக் கொண்டி ருந்தான். அதிலே ஒன்று ‘வந்தே மாதரம் என்போம் / எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்…” என்கிற அற்புதமான கவிதை. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் நேற்று அந்தப் பாம்பாட்டி மகுடியில் வாசித்தானே அதே மெட்டில்தான் பாரதி அந்தக் கவிதையை எழுதியிருந்தான் என்பது பலருக்கும் தெரிந்திராத செய்தி. பாரதி, தன் கவிதைகளுக்காக கண்களை மூடிக்கொண்டு வெறுமனே கனவுலகில் சஞ்சரித்தவன் இல்லை. மாறாக அவன் தன் கவிதைக்கான ஆன்மாவைத் தான் நேசிக்கும் மனித சமூகத்திடமிருந்தே தேர்வு செய்து கொண்டவன்.

-

==================================================

>பாரதி வசந்தன் (கட்டுரையிலிருந்து..)

http://www.keetru.com/kavithaasaran/mar09/bharathivasanthan.php

ஹைகூ என்றால் பதினேழு அட்சரங்கள் எங்கே?

மட்சுயாமா என்ற ஊரில். ஆண்டு 1986. ஹைகூவில்
உந்தப்பட்டு ஒரு கவிதை எழுதினேன்:

கோவில் கூரையில்
நிற்கும் மழைத்துளி
சிந்தும் டிவி ரத்தம்

நான் கோவில் என்பது ஜப்பானிய ஷின்டோ ஷிரைன்.
அமைதியான, அழகான வழிபாட்டுத் தலம்.
கும்பிடும் கூட்டம் கூட கிடையாது.
எல்லோரும் டிவிக்கு முன்னால் தவம் கிடக்கின்றனர்.
பார்த்தேன், எழுதினேன். எனது ஜப்பானிய மொழி
ஆசிரியையிடம் காண்பித்தேன்.

என்ன இது? என்றார்.

ஹைகூ என்றேன்.

பதினேழு அட்சரங்கள் எங்கே? என்றார். முழித்தேன்.
அட்சரம் முக்கியமில்லை, ஹைகூ தரும் சித்திரம்தான்
முக்கியம் என்றேன்.

சித்திரத்தை பார்த்தார். என்ன இது ரத்தம், கித்தமென
என்றார். ரொம்ப அச்சாணியப்பட்டார். மேலும் விளக்கினேன்.
சமூகம் ரொம்ப மாறிவிட்டது. இயற்கையின் எளிமையை
ரசிக்க ஆளில்லை. எல்லோரும் டிவி தரும் சுகத்தில்
ஆழ்திருக்கிறார்கள். டிவி தருவது செக்ஸ்சும்,
வன்முறையும்தான் என்றேன்.

ஒரு வழியாக ஒப்புக்கொண்டார். இது தற்கால சமூகத்தை
சித்தரிப்பதாக. தமிழிலிருந்து ஜப்பானியதுக்கு மாறிய
கவிதைகளில் இது ஒன்று.

அந்த மொழியில் கவனமாக 17 அட்சரத்தை போட்டுவிட்டார்.

>நா.கண்ணன் (ஜெர்மனி)
-
==========================
{படித்ததில் பிடித்தது}
நன்றி:
ஹைகூ, பொய்கூ, புதுக்கூ -கட்டுரையிலிருந்து ஒரு பகுதி

http://www.subaonline.net/nakannan/tamilkudil/haiku.html

« பழைய வரவுகள்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 56 other followers