கூரையென்று
யாரின் படமோ
ரசம் போன
ஒரு கண்ணாடியோ
நாட்காட்டியோ
தொங்கியிருக்கலாம்
அறையப்பட்ட ஆணிகளில்
-
வெளவால்களோ
எட்டுக்கால் பூச்சிகளோ
எதுவும் இங்கில்லை
யாரோ வைத்த
பறவைகளற்ற
புங்கமரமும்
என்றோ கட்டப்பட்ட
இற்ற கொடிக்கயிறும்
இருக்கின்றன
-
இன்னும்
சமையலறைப்
புகைக்கருப்பும்
மோர்க்காரியின்
புள்ளிக்கணக்கும்
எஞ்சிய நிழலாய்
வீடுகள்
சொந்தமாக இருக்கட்டும்
வாடகைக்கு இருக்கட்டும்.
ஒருநாளும்
பறவைகளாலோ
மனிதர்களாலோ
நிராகரிக்கப்படாது
இருக்கட்டும் கடவுளே
-
================================
>சுந்தர்ஜி
நன்றி: கல்கி
