‘என்னை எங்கு பார்த்தாலும்
ஏன் உடனே நின்று விடுகிறாய்?’
என்றா கேட்கிறாய்.
நீ கூடத்தான்
கண்ணாடியை எங்கு பார்த்தாலும்
ஒரு நொடி நின்று விடுகிறாய்
உன்னைப் பார்க்க உனக்கே
அவ்வளவு ஆசை இருந்தால்
எனக்கு எவ்வளவு இருக்கும்!
–
‘போதும் பார்த்தது
கண் பட்டுவிடப்போகிறது’ என்றாய்
ச்சே…ச்சே..உன்னைப் பார்த்தால்
என் கண்களாவது பட்டுப் போவதாவது
துளிர்த்துக்கொண்டல்லவா இருக்கின்றன.
–
கரையில் நின்றிருந்த உன்னைப் பார்த்ததும்
கத்தி விட்டன கடல் அலைகள்…
‘கோடான கோடி ஆண்டுகள்
எம்பி எம்பிக் குதித்து
கடைசியில் பறித்தே விட்டோமா
நிலவை’ என்று.
–
தான் வரைந்த ஓவியத்தை
கடைசியாக ஒரு முறை
சரி செய்யும் ஓவியனைப் போல்
நீ ஒவ்வரு முறையும்
உன் உடைகளை சரி செய்கிறாய்
–
காற்றோடு விளையாடிக் கொண்டிருந்த
உன் சேலைத் தலைப்பை இழுத்து
நீ இடுப்பில் செருகிக்கொண்டாய்
அவ்வளவுதான்…
நின்றுவிட்டது காற்று.
————————
(source)posted by;
http://www.kuralvalai.com/2006/09/4
